மின்சாரம் தாக்கி செடிகளுக்குள் இறந்து கிடந்த சிறுவன்

கணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி செடிகளுக்குள் சிறுவன் இறந்து கிடந்தான். மின்ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது உடல் மீட்கப்பட்டது.

Update: 2018-07-10 21:30 GMT
அடுக்கம்பாறை, 

கணியம்பாடி அருகே நஞ்சுகொண்டா புரத்தை சேர்ந்தவர் ராஜவேலு. இவரது மகன் இளவரசன் (வயது 15). 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தான். நேற்று முன்தினம் வீட்டில் மதியம் சாப்பிட்டு விட்டு விளையாடுவதற்காக இளவரசன் வெளியே சென்றான்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கணியம்பாடி பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் தென்னை மட்டைகள் விழுந்ததால் மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சென்ற மின்வயர்கள் அறுந்து விழுந்து கிடந்தது.

இந்த நிலையில் விவசாய நிலத்தில் நடந்து சென்ற இளவரசன் அறுந்த கிடந்த மின்வயரில் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். அவனது உடல் செடிகளுக்கு மத்தியில் கிடந்ததால் யாரும் பார்க்கவில்லை.

இளவரசன் இரவு வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். நண்பர்களிடம் விசாரித்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

நேற்று காலை கணியம்பாடியை சேர்ந்த மின்ஊழியர்கள் நஞ்சுகொண்டாபுரம் கிராமத்துக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது செடிகளுக்கு இடையே அறுந்து கிடந்த மின்கம்பியை தூக்கியபோது இளவரசன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவனது பெற்றோர், உறவினர்கள் வந்து இறந்த சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்