தீர்த்தஹள்ளியில் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு

தீர்த்தஹள்ளியில் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவளுடைய குடும்பத்தினருக்கு கலெக்டர் லோகேஷ் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

Update: 2018-07-10 21:45 GMT
சிவமொக்கா,

மலைநாடு என்றழைக்கப்படும் சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தீர்த்தஹள்ளி தாலுகாவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக தீர்த்தஹள்ளி தாலுகாவில் ஓடும் ஹொன்னதாளு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தீர்த்தஹள்ளியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நேற்று அந்த தாலுகா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்த்தஹள்ளி தாலுகா கெந்தாளபைலு கிராமத்தை சேர்ந்த ஆஷிகா (வயது 15) என்ற சிறுமி அந்தப்பகுதியில் உள்ள கால்வாய் அருகே நின்று கொண்டிருந்தாள். அப்போது கால்வாயில் அதிகப்படியான மழைவெள்ளம் வந்ததால், சிறுமி ஆஷிகா கால்வாயில் அடித்து செல்லப்பட்டாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் சிறுமியை மீட்க முயன்றனர். ஆனாலும் அவள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டாள். ஆனாலும் அவளுடைய உடலை மீட்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சிறுமியின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. தீயணைப்பு படையினர் மற்றும் நீச்சல் படையினர் வீரர்கள் சிறுமியின் உடலை தீவிரமாக தேடினார்கள். நேற்று காலை 11 மணி அளவில் சிறுமி ஆஷிகாவின் உடல் மீட்கப்பட்டது. அவளுடைய உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தீர்த்தஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆஷிகாவின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆஷிகாவின் உடலை பார்த்து அவளுடைய பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுதவிர தீர்த்தஹள்ளி தாலுகாவில் ஒருசில கிராமங்களில் மழைவெள்ளம் புகுந்ததால் உணவு பொருட்கள், துணிகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

இந்த நிலையில் தீர்த்தஹள்ளி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று மாவட்ட கலெக்டர் லோகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சிறுமி ஆஷிகாவின் வீட்டுக்கு சென்று அவளுடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக கலெக்டர் லோகேஷ் வழங்கினார்.

மேலும், மழையால் உணவு மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு உணவு பொருட்களும், மாற்று துணியும் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். தீர்த்தஹள்ளியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும் (புதன்கிழமை) அந்த தாலுகாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்