மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - 13 நாட்களில் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி

மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2018-07-10 23:15 GMT
பெங்களூரு,

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொழிலாளியின் 3½ வயது மகனின் சாட்சியை கேட்டு சித்ரதுர்கா கோர்ட்டு நீதிபதி 13 நாட்களில் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளார்.

இந்தியாவிலேயே வழக்கு ஒன்றில் அதிவேகமாக தீர்ப்பு வழங்கிய பெருமை சித்ரதுர்கா மாவட்ட முதன்மை மற்றும் செசன்சு கோர்ட்டையே சேரும். அதாவது, மனைவியை கொன்ற 75 வயது முதியவருக்கு கொலை நடந்த 11 நாட்களிலேயே ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி வஸ்த்ராமட் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு கடந்த 7-ந் தேதி வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இன்னொரு வழக்கில் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு கொலை நடந்த 13 நாட்களிலேயே ஆயுள் தண்டனை விதித்து சித்ரதுர்கா மாவட்ட முதன்மை மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதி வஸ்த்ராமட் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே தாலுகா துருவனூர் அருகே உள்ளது பாகலூரங்கவனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சக்கம்மா(31). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 3½ வயதும், இளைய மகனுக்கு ஒரு வயதும் ஆகிறது.

ஸ்ரீதருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர் குடிபோதையில் தனது மனைவி சக்கம்மாவை அடித்து உதைத்து வந்துள்ளார். மேலும், சக்கம்மாவின் நடத்தையிலும் ஸ்ரீதருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடிக்கடி அவர் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் தனது மனைவி மீது தாக்குதல் நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த மாதம்(ஜூன்) 27-ந் தேதி ஸ்ரீதர்-சக்கம்மா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவாகி உள்ளது. பின்னர், சக்கம்மா தனது மகன்களுடன் வீட்டின் உள்ளே தூங்கியுள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத ஸ்ரீதர், சக்கம்மாவின் தலையில் கல்லைப்போட்டுள்ளார். இதனால் அவருடைய தலை நசுங்கியது. இந்த சத்தம் கேட்டு சக்கம்மாவின் அருகே படுத்து இருந்த 3½ வயது சிறுவன் கண் விழித்தான். அவன், தனது தாயின் தலையில் கல்லைப்போட்டுவிட்டு தந்தை ஸ்ரீதர் ஓடுவதை பார்த்து அழுது கொண்டே அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு ஓடினான். அவனுடைய அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் சக்கம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அவர்கள் துருவனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு சித்ரதுர்கா மாவட்ட முதன்மை மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் ஸ்ரீதரின் மூத்த மகனான 3½ வயது சிறுவன் உள்பட 38 பேர் சாட்சியங்கள் அளித்தனர்.

நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது ஸ்ரீதரின் மூத்த மகனான 3½ வயது சிறுவன், கொலை தொடர்பாக நீதிபதி வஸ்த்ராமட் முன்பு சாட்சியம் அளித்தான். மழலை குரலில் சிறுவன் கொலை பற்றி நீதிபதியிடம் கூறியபோது, திடீரென்று குற்றவாளி கூண்டில் நின்ற தனது தந்தை ஸ்ரீதரை பார்த்து, ‘எதற்காக என் அம்மாவை கொன்றீர்கள்’ என கேள்வி கணையை தொடுத்த நேரத்தில் ஸ்ரீதர் கண் கலங்கியதோடு, கோர்ட்டில் மயான அமைதி நிலவ அவரால் தனது மகனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வஸ்த்ராமட் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது, ஸ்ரீதர் மீதான கொலை குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், சிறை தண்டனை முடிவடைந்து விடுதலையாகும்போது நல்ல மனிதராகவும், மகன்களுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்க வேண்டும். பழி வாங்கும் எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு இருக்கக்கூடாது என்று ஸ்ரீதருக்கு, நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், 2 சிறுவர்களின் எதிர்காலத்துக்காக நிதி உதவி செய்யும்படி மாநில அரசுக்கு கடிதம் எழுதுவதாகவும் நீதிபதி வஸ்த்ராமட் கூறினார்.

இந்த நிலையில் தீர்ப்பை கேட்டு கண்கலங்கி நின்ற ஸ்ரீதர், நீதிபதி வஸ்த்ராமட்டிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். சிறைக்கு செல்வதற்கு முன்பு தனது 2 மகன்களை சந்திக்க அனுமதி வழங்கும்படி அவர் கேட்டு கொண்டார். இதைக்கேட்ட நீதிபதி, மகன்களை சந்திக்க அனுமதி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, இளைய மகனை கையில் எடுத்து ஸ்ரீதர் கொஞ்சினார். ஆனால் அவரிடம், அவருடைய மூத்த மகன் செல்ல மறுத்தான். சிறிது நேரத்துக்கு பின்னர் ஸ்ரீதர் அருகே மூத்த மகனும் சென்றான். அவனையும் ஸ்ரீதர் கட்டித்தழுவி கண்கலங்கினார். இந்த சம்பவத்தை பார்த்த நீதிபதி வஸ்த்ராமட், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட அனைவரும் கண்கலங்கி விட்டனர். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீதரை போலீசார் கோர்ட்டில் இருந்து அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்