சென்டிரல் பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த திருடனை விரட்டிப்பிடித்த போலீஸ்காரர்

சென்னை சென்டிரல் பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்து தப்பியோடிய திருடனை, போலீஸ்காரர் ஒருவர் விரட்டிச் சென்று பிடித்தார்.

Update: 2018-07-10 23:30 GMT
சென்னை,

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. சென்டிரல் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு பயணி ‘அய்யோ திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். அப்போது பயணிகள் கூட்டத்தை தள்ளிக்கொண்டு ஒரு வாலிபர் ஓடினார்.

பயணியின் அபாய குரலை கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் அகமது உசேன் பார்த்தபோது பயணி ஒருவரிடம், மர்மநபர் செல்போன் திருடிக்கொண்டு ஓடுவதை கண்டார். உடனே அவர் அந்த திருடனை விரட்டிச் சென்றார். கொட்டும் மழையிலும், போக்குவரத்து நெரிசலான அந்த சூழ்நிலையிலும் எதையும் கவனத்தில் கொள்ளாமல் திருடனை பிடிப்பதே இலக்காக போலீஸ்காரர் ஓடினார்.

ரிப்பன் மாளிகை அருகே அந்த திருடனை மடக்கிப்பிடித்தார். அந்த திருடனை மீண்டும் சென்டிரல் பஸ் நிலையம் அழைத்துவந்து, அவரிடம் இருந்த செல்போனை மீட்டு உரிய பயணியிடம் ஒப்படைத்தார்.

திருடனை விரட்டிப்பிடித்து உரியவரிடம் செல்போனை ஒப்படைத்த போலீஸ்காரர் அகமது உசேனை பயணிகள் மற்றும் சக போலீசாரும் பாராட்டினர். சிலர் இந்த காட்சியை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்