பாலிகானபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்

பாலிகானபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.

Update: 2018-07-10 22:30 GMT
ஓசூர்,

ஓசூர் அருகே கக்கனூர் கொத்தனூர், சின்னசாதனபள்ளி பெலத்தூர், பாலகானபள்ளி, முகுலபள்ளி, தேவீரபள்ளி, சத்தியமங்கலம் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீரை வழங்கினார். மேலும் ஆலூர் மற்றும் சத்தியமங்கலத்தில் பல்நோக்கு மைய கட்டிடங்களும், பாலிகானபள்ளி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு ஆரோக்கியமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, 1 கேன் தண்ணீர், ரூ.5-க்கு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விழாக்களில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூர் நகரம், தமிழகத்திலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இதனால், ஓசூர் நகராட்சி, விரைவில் மாநகராட்சியாக உருவாக வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இதில், ஓசூர் தாசில்தார் பண்டரிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், விமல், ரவிக்குமார், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயராம், முனிராஜ், முன்னாள் ஓசூர் நகராட்சி கவுன்சிலர் அசோகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்