மும்பையில் தரையிறங்கிய போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

மும்பையில் தரையிறங்கிய போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-07-10 21:56 GMT
மும்பை,

மும்பையில் கனமழை பெய்து வரும்நிலையில் மோசமான வானிலை காரணமாக நேற்று விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, விமானங்கள் தாமதமாக இயங்கின. மேலும் விமான நிலையத்தில் பிரதான ஓடுபாதை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் மாற்று ஓடுபாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பை நோக்கி வந்தது. பிற்பகல் 2.51 மணியளவில் அந்த விமானம் மும்பை விமான நிலைய மாற்று ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது, மழையினால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி இருந்தது.

இதன் காரணமாக விமானத்தின் டயர் மழைநீரில் சறுக்கி கொண்டு ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி கீழே இறங்கியது. இதில் விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். இதைத்தொடர்ந்து விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் சிப்பந்திகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதன் பின்னர் என்ஜினீயர்கள் வந்து அந்த விமானத்தை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “விமானம் சரியான இடத்தில் தரையிறங்கிய போது, கனமழை காரணமாக ஓடுபாதை வழுக்கும் நிலையில் இருந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது’’ என்றார். இந்த சம்பவத்தால் விமானத்துக்கோ, விமான நிலையத்துக்கோ எந்தவித சேதமும் இல்லை என ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்