மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடையை தரமானதாக வழங்க வேண்டும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடையை தரமானதாக வழங்க வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-07-10 22:15 GMT
சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஜோசப்ராஜ், செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் குமரேசன், துணைச்செயலாளர்கள் ரவி, ஜீவா, ஆனந்தி, துணைத் தலைவர் மாலா, அமலசேவியர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த மாதம் நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதலில் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே மாவட்டத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில் காலிப்பணியிடங்களை வெளிப்படையாக அறிவித்து 2-ம் கட்ட கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


சிவகங்கை 48-வது காலனியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் தற்போது 146 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் உயர்நிலைக்கல்வி படிக்க சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பல மாணவர்கள் தங்களது மேல்படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் அந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். தொடர்ந்து இரண்டு ஊதியக் குழுவிலும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகிஇருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டை நீக்கக்கோரி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாவட்ட மாநாட்டை வருகிற (செப்டம்பர்) மாதம் 1-ந் தேதி சிவகங்கையில் நடத்துவது, அந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை திரட்டுவது என்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வெளிவரும் மாத இதழுக்கு அனைத்து பள்ளிகளும் ஆண்டுதோறும் சந்தா செலுத்தி வரும் நிலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக மாத இதழ் வருவது நிறுத்தப்பட்டுள்ளது.


இதனை சரி செய்து உடனடியாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் இதழ் அனுப்ப வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சேம நலநிதி கடன் தொகையில் அரசு விதிகளுக்கு முரணாக கடன் தொகை அனுமதித்து தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வரும் திருப்புவனம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் 2 பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 26-ந் தேதி சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடையை தரமானதாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்