காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் ரெயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை

காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே செல்லும் பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பொதுநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-11 22:45 GMT
காரைக்குடி,

காரைக்குடி வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்கம், அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம், தொழில் வணிக கழகம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் ஆகிய பொதுநல சங்கத்தினர் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணி கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ரூ.700கோடி மதிப்பீட்டில் தொடங்கி நிறைவு பெற்றது. இதையொட்டி சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் கட்டணம் தற்சமயம் அதிகஅளவு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.


குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினசரி சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் சுமார் 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் காரைக்குடி மற்றும் மதுரைக்கும் கல்லூரி படிப்பிற்கு சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஅளவு கட்டணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை தினந்தோறும் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டித்து இயக்கினால் அதிகஅளவில் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்