மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் 2 லாரிகளின் கண்ணாடி உடைப்பு

விராலிமலை அருகே குளத்தாத்துப்பட்டி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் 2 லாரிகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-11 23:00 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி, அதனை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை விராலிமலை அருகே உள்ள குளத்தாத்துப்பட்டி ஆற்று பகுதியில் ஒரு லாரியில் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்தனர். அப்போது அந்த வழியாக மேலும் 7 லாரிகள் மணல் அள்ளுவதற்காக அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்து அந்த 7 லாரிகளையும் சிறைபிடித்தனர். அதில் 2 லாரிகளின் கண்ணாடிகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, விராலிமலை தாசில்தார் பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணல் அள்ளப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த 8 லாரிகளையும் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி பறிமுதல் செய்து, விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஆவூர் அருகே உள்ள மதயானைப்பட்டி, கலிமங்களம், வில்லாரோடை, கோலார்பட்டி, பாக்குடி, வளதாடிப்பட்டி ஆகிய ஊர்களை ஒட்டியுள்ள கோரையாற்றுப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக மணல் கடத்தப்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர். இருப்பினும் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து மணல் கடத்தலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் கணேஷ், இலுப்பூர் கோட்டாட்சியர் ஜெயபாரதி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கோரையாற்றுப்பகுதியில் 2 இடங்களில் மணல் குவாரியும், பூமரம் என்ற இடத்தில் மணல் சேமிப்பு கிடங்கும் அமைப்பதற்கான பணிகள் நடந்து முடிந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் மதயானைப்பட்டி அரசு மணல் குவாரியில் இருந்து சேமிப்பு கிடங்கிற்கு மணல் அள்ளி செல்வதற்காக பொக்லைன் எந்திரம் மற்றும் 15-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் அங்கு வந்தன. இதையடுத்து அந்த பகுதியில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஒரு லாரியில் மணல் ஏற்றி அனுப்பி வைத்தனர், இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மணல் அள்ளி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை தாசில்தார் பார்த்திபன் தலைமையிலான அதிகாரிகள், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இப்பகுதியில் இனிமேல் மணல் அள்ளப்பட மாட்டாது என பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்