சாலையின் நடுவில் உருவான திடீர் குழியில் அபாய பலகை வைத்து மாலை அணிவிப்பு

சாலையின் நடுவில் உருவான திடீர் குழியால் விபத்து ஏற்படுவதை தடுக்க அபாய பலகை வைத்து மாலை அணிவிக்கப்பட்டது.

Update: 2018-07-11 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் பல்வேறு இடங்களில் சாலைகள் மேடு, பள்ளமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் இருந்து சூரம்பட்டி வலசு வரை உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு அங்கு தார் சாலை அமைக்கப்படவில்லை. அங்கு புதிய சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் சூரம்பட்டி எஸ்.கே.சி.ரோட்டில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட இடத்தில் சாலையின் நடுப்பகுதியில் திடீரென குழி ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.


அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திடீரென உருவான குழியில் ‘அபாயம்’ என்று ஆங்கில மொழியில் எழுதிய பலகையை வைத்தனர். மேலும், அந்த பலகைக்கு அவர்கள் மாலையை அணிவித்து எச்சரிக்கை விடுக்க வைத்தது அந்த வழியாக சென்றவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “சூரம்பட்டியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு திடீரென குழி ஏற்பட்டதால், கரணம் தப்பினால் மரணம் என்பதை உடனடியாக புரிந்து கொள்வதற்காக அபாய அறிவிப்பு பலகை வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. புதிய சாலை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.

மேலும் செய்திகள்