ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

சிறையில் ஏற்பட்ட நட்பால் கூட்டு சேர்ந்த 2 பேர் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-07-11 22:00 GMT
கோவை,

கோவை சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை, மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று நகை பறித்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பெரியய்யா இந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் பீளமேடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு உமா மற்றும் போலீசார் கார்த்தி, சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வரும் 2 பேர் பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு கோவை காளப்பட்டி சாலையில் தனிப்படையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அந்த காரில் இருந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரிடமும் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கோவை போத்தனூர் இட்டேரி பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் ஷாஜா என்கிற ஷாஜகான் (வயது 29), நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலூரை சேர்ந்த ரங்கநாதன் மகன் ரகு (27) என்பது தெரியவந்தது.

2 பேரும் கூட்டாக சேர்ந்து கோவை பகுதியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டதுடன், குமரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருந்து புதிய காரை திருடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

ஷாஜகான் நகை திருடுவதில் கில்லாடி. இவர் மீது கோவை மாநகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதேபோல் ரகு வீடு புகுந்து திருடுவதில் கைதேர்ந்தவராக இருந்து உளளார். இவர் மீது குன்னூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் இவர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு உள்ளது. சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த இருவரும் ஆடம்பரமாக வாழ பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டனர். இதில் குறைந்த அளவே பணம் கிடைத்து உள்ளது. இதனால் ரகு, ஷாஜகானிடம் குமரி மாவட்டம் சென்று பெரிய வீட்டில் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து 2 பேரும் குமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட புத்தளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சொகுசு கார், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்டவற்றை திருடி உள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் விசேஷ நிகழ்ச்சிக்கு நகைகளை அணிந்துகொண்டு சென்றதால், இவர்களால் நகைகளை கொள்ளையடிக்க முடியவில்லை. திருடிய காரில் கோவா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து உள்ளனர்.பின்னர் கோவை திரும்பிய இவர்கள் கோத்தாரி நகர், வரதராஜபுரம், பூங்கா நகர், கே.பி.ஆர். நகர் உள்ளிட்ட இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள், ஒரு சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும். 

மேலும் செய்திகள்