திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றவர்களுக்கு கட்டணம்

திருமங்கலம் நகராட்சியில் பாதாளச்சாக்கடைஇணைப்பு பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2018-07-11 22:30 GMT
மதுரை,

மதுரை அருகே திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது. இந்த இணைப்புகள் பெரும்பாலும், அந்த பகுதியில் குடியிருப்பவர்களின் சொந்த முயற்சியால் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வருமானத்தை காரணம் காட்டி திருமங்கலம் நகராட்சி சார்பில் பாதாளச்சாக்கடையில் இணைப்பு கொடுத்துள்ளவர்களின் வீடுகளுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

அத்துடன், மாதாந்திர கட்டணமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்காக பாதாள சாக்கடையில் இணைப்பு பெற்றவர்களுக்கு பயன்பாட்டை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் நகரில் பாதாளச்சாக்கடைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.


மழைக்காலங்களில் அனைத்து தெருக்களிலும் சாக்கடை நீர் வழிந்தோடி கொண்டிருக்கும் அவலம் உள்ளது. பாதாள சாக்கடை மூடிகள் பெரும்பாலான இடங்களில் உடைந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன. பல மாதங்களுக்கு பின்னரே இந்த மூடிகள் சரி செய்யப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அதேபோல, பொதுமக்களும் பாதாள சாக்கடைகளை முறையாக பயன்படுத்துவதில்லை. ரோட்டோரங்களில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்லும் லாரிகளால் சேதப்படுத்தப்படுகிறது. இதற்கிடையே, குப்பைகள் அள்ளும் விவகாரத்திலும் பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமங்கலம் நகருக்கு வெளியே இருக்கும் நகராட்சி எல்லைக்குள் வராத வணிக நிறுவனங்களின் குப்பைகளை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, துப்புரவு பணியாளர்களை தனியார் நிறுவனங்களுக்காக பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.


இது போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில், பாதாள சாக்கடை இணைப்பு பெற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது பொதுமக்களின் அதிருப்திக்கும், ஆதங்கத்துக்கும் வழிவகுத்துள்ளது. அதாவது, புதிதாக இணைப்பு பெறுபவர்களிடம் கட்டணம் வசூலிப்பது என்பது நடைமுறையாகும். ஆனால், ஏற்கனவே இணைப்பு பெற்றவர்களிடம் கட்டணம் வசூலிப்பது என்பது சட்டம் மற்றும் இயற்கை நீதிக்கு முரணானது என்று பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தரப்பில் கூறும்போது, அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது போலவே, திருமங்கலம் நகராட்சியிலும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இது வரை பாதாள சாக்கடைக்காக எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. இதனால், பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை. எனவே, கட்டண கேட்பு நோட்டீசுகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தயாராக உள்ளது என்கின்றனர்.

மேலும் செய்திகள்