அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம்: அடிப்படை வசதிகள் கேட்டு மாற்றுத்திறனாளிகள் தர்ணா

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த சிறப்பு முகாமில், அடிப்படை வசதிகள் கேட்டு மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-11 22:00 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வாரந்தோறும் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில், பலதரப்பட்ட மாற்றுத்திறனாளிகளையும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தல், அடையாள அட்டை வழங்குதல், அரசின் சலுகைகள் பெற சான்றுகள் வழங்கும் பணி நடைபெறுகிறது.

அதன்படி, நேற்று கண்சிகிச்சை பிரிவில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து அடையாள அட்டை, மருத்துவ சான்றுகள் வழங்கப்பட்டு வந்தன. அப்போது, திடீரென கண்சிகிச்சை பிரிவு முன்பு மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பிடம், மற்றும் குடிநீர், அமர்வதற்கு இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், பலருடைய அடையாள அட்டை மற்றும் பயண அட்டைகளில் மருத்துவர்களின் சீல், கையெழுத்து ஆகியவை இல்லை. எனவே, சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர வேண்டும் என்றனர்.

இதற்கிடையே அங்கு வந்த நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தேவையான வசதிகளை செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார். அதன்பேரில், தர்ணாவை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்