பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் பக்தர்கள் கோரிக்கை

சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-11 21:56 GMT
செங்கல்பட்டு.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது ரூ.1 கோடி செலவில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.

கோவில் முகப்பு அருகே கட்டுமான பொருட்கள் உள்ளன. அதற்கு இடதுபுறமாக உள்ள இடத்தில் பக்தர்கள் நடந்து வந்து சாமியை தரிசிக்க ஏதுவாக சுமார் 8 அடி அகலம் உள்ள பாதையை ஆக்கிரமித்து பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமத்துடன் வந்து செல்கின்றனர்.

இது குறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது:-

கோவிலுக்கு வெளியே ஒரே ஒரு கடை மட்டுமே கோவில் தரப்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மற்ற கடைகள் எல்லாம் ஆக்கிரமித்துதான் வைத்துள்ளனர். இதனை அகற்றுவதற்கு சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி மன்றம்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும்போது இந்த கோவிலின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பாக ஏராளமானோர் காய்கறிகள் மற்றும் செடிகளை விற்பனை செய்கின்றனர். கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்