ஊட்டியில் கடுங்குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டியில் கடுங்குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-07-11 22:15 GMT
ஊட்டி, 


நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் ஊட்டியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. ஊட்டி நகரில் ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் கூலி தொழிலாளர்கள் சாலையோரங்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.

ஊட்டி நகரில் முக்கிய இடங்களான மெயின் பஜார், ராமகிருஷ்ணாபுரம், பாம்பேகேசில், காந்தல், ஹில்பங்க், ரோஸ் பவுண்ட், ஆடாசோலை உள்ளிட்ட பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

ஊட்டியில் கடுங்குளிர் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு நேற்று வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிரை சமாளிக்க கம்பளி ஆடைகள் மற்றும் தொப்பிகளை அணிந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். சாரல் மழை பெய்து கொண்டு இருந்ததால் அவர்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் தொட்டபெட்டா மலை சிகரம் ஊட்டி அருகே உள்ளது. அந்த மலை சிகரத்தில் இருந்து பார்த்தால் பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகிய தோற்றம், ஊட்டி ஏரியை கண்டு ரசிக்கலாம். சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை காணும் வகையில் தொலைநோக்கி இல்லம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தொலைநோக்கி மூலம் மேட்டுப்பாளையம், குன்னூர், கோத்தகிரி, மைசூரு, கர்நாடகா மாநில எல்லை உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.

இந்த நிலையில் நேற்று தொட்டபெட்டா மலை சிகரமே தெரியாத அளவுக்கு மேகமூட்டம் சூழ்ந்து இருந்தது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்டபடி அங்கு வருகை தந்தனர். அவர்கள் மேகமூட்டத்துக்கு நடுவே நடந்து சென்று, தொலைநோக்கி இல்லம் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் தொலைநோக்கி மூலம் மேற்கண்ட இடங்களை பார்க்க முடியாமலும், இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமலும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அங்கு பலத்த காற்று வீசியதால் கடுங்குளிர் நிலவியது. 

மேலும் செய்திகள்