தூத்துக்குடி அருகே மனுநீதிநாள் முகாம்: 67 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

தூத்துக்குடி அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.9¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Update: 2018-07-12 21:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.9¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

மனுநீதிநாள் முகாம் 

தூத்துக்குடி அருகே உள்ள பட்டணமருதூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 67 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்குவதையும் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் வகையிலும், மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் வகையிலும் மனுநீதிநாள் முகாமை நடத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் தோட்டக்கலைத்துறை மூலம் 3 ஆயிரத்து 284 முருங்கை மரக்கன்றுகளும், 7 ஆயிரத்து 73 பப்பாளி மரக்கன்றுகளும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் விளையும் பப்பாளி மற்றும் கீரைகளும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும். மக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பில் முதன்மையாக உள்ள ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கும் திட்டம் நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆகையால் இந்த ஊராட்சி மக்கள் பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு முதல் பரிசை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு துணிப்பைகளை வழங்கி, பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு கலெக்டர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணைஆட்சியர் சங்கரநாரயணன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜாண்சன் தேவசகயாம், சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ஞானராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்