ஊராட்சி பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்த பொதுமக்கள்

கொத்தமங்கலம் சிதம் பரவிடுதி ஊராட்சி பள்ளிக்கு பொதுமக்கள் கல்விச்சீர் கொண்டு வந்தனர்.

Update: 2018-07-12 22:30 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தரம் உயர்த்த வேண்டும்,மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள், அனைத்து மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக வேன் வழங்கினார்கள். அதே போல மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக 19 சைக்கிள்கள், கணினி வழங்கியதுடன் ஆங்கில பயிற்சிக்காகவும், கணினி பயிற்சிக்காகவும் 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அனைவருக்கும் அடையாள அட்டை போன்ற வசதிகளையும் செய்து கொடுத்ததுடன் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்தும் வந்தனர். அதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களையும் அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இந்த ஆண்டு 32 புதிய மாணவர்கள் சேர்க்கையுடன் 101 மாணவ, மாணவிகள் பயிலும் இந்த அரசு பள்ளியில் அதிகமான மாணவ, மாணவிகள் இலவச வேனில் வந்து செல்கின்றனர். மேலும் பள்ளி மாணவர்களின், கல்விக்கு தேவையான பொருட்கள் பற்றி ஆய்வு செய்த குழுவினர் மாணவர்களுக்கான இருக்கைகள், பீரோ, மின்விசிறிகள், மேஜை, நாற்காலிகள், கரும்பலகைகள், வண்ண பலகை, பாய்கள், குடங்கள், எழுது பொருட்கள், முதலுதவி மருந்துகள், எழுத்து பயிற்சி கையேடுகள் என்று ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஊர் பொதுமக்களுடன் இணைந்து வாங்கினர். இதனை தொடர்ந்து திருவள்ளுவர் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக கல்விச்சீரினை பள்ளிக்கு கொண்டு வந்தனர். அப்போது பொதுமக்களை பள்ளி ஆசிரியைகள் சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து கல்விச்சீராக கொண்டு வரப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை சந்திரா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த கல்விச்சீரை பள்ளியில் ஒப்படைத்தனர்.

இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிமாறன், வட்டார வளமைய கண்காணிப்பாளர் செல்வராஜ், ஓய்வுபெற்ற உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ரெத்தினம், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கடந்த மாதங்களில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர் அருண் தொகுத்து வழங்கினார். 

மேலும் செய்திகள்