தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை 31-ந் தேதி வரை நடைபெறும்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும் என்று துணைவேந்தர் பாஸ்கரன் கூறினார்.

Update: 2018-07-12 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் பட்டப்படிப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. பேராசிரியர் ரவிவர்மன் வரவேற்றார். பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

விழாவுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

ஒரு மொழிக்காக, மொழியுனுடைய வரலாற்றுக்காக, பண்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் 25 துறைகள், தமிழ்ப்பண்பாட்டை எப்படியெல்லாம் கட்டிக்காக்க வேண்டும் என்ற முனைப்பிலே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

அதோடு நாம் இணைந்து எப்படியெல்லாம் செயல்படலாம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவது தான் தமிழ்ப்பல்கலைக்கழகம். பிற நிறுவனங்களில் நீங்கள் படித்தால் ஆசிரியராக செல்லலாம். ஆனால் இங்கு படிக்கும் போதுதான் ஆசிரியர் படிப்போடு தமிழ் உணர்வை பெறுகின்ற ஓர் இடமாக இருக்கும். இங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றாலே உங்களுக்குள் இருக்கும் தமிழர் உணர்வு தானே வரும். கற்பித்தல் என்பது 25 சதவீதம் தான். 75 சதவீதம் பாடம் நடத்துவது என்பதை செயல்முறைகளோடு, நடிப்புத்துறையோடு நடத்துவது தான் உண்மையான கற்பித்தல் ஆகும்.

தற்போது கற்பித்தலில் இசை, நாட்டியம், ஓவியம் போன்ற வழிகளிலே பாடங்களை நடத்தி மாணவர்களை ஈர்க்க முடியும் என்று புதிய கல்வி கொள்கை சொல்கிறது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இன்று(நேற்று) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய மாணவர்கள், நாளைய ஆசிரியர்கள் என்ற பொறுப்பை உணர்ந்து இந்த வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அறவே அகற்றவேண்டும்.

2018-19-ம் ஆண்டிற்கான 100 இளங்கல்வியியல் மாணவர்களுக்கான சேர்க்கை நிறைவடைந்தது. எம்.எட். படிப்பிற்கான நேரடி சேர்க்கை வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பதிவாளர் முத்துக்குமார், பேராசிரியர்கள் சின்னப்பன், ஆனந்தஅரசு, முத்தையன், நளினி, முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்