திருவாரூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-12 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காகதான் உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆண்கள் 25 வயதிற்கு பிறகும், பெண்கள் 21 வயதிற்கு பிறகும் திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்ற அளவில் குடும்பத்தின் அளவை கட்டுப்படுத்துவதின் மூலம் வீட்டிலும், நாட்டிலும் மகிழ்ச்சி நிலவ வாய்ப்பு ஏற்படுகிறது. சிறு குடும்பமே ஓர் அர்த்தமுள்ள எதிர்கால ஆரம்பத்திற்கு உறுதுணையாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.

முன்னதாக உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் ஏற்றனர். இதில் மருத்துவம் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் உமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், காசநோய் துணை இயக்குனர் புகழ், முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து, மாவட்ட கல்வி மற்றும் தொடர்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்