சட்டசபைக்கு போதைப் பொருட்களுடன் வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

புதுவை சட்டசபைக்கு போதைப் பொருட்களுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.

Update: 2018-07-12 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போதைப் பொருட்களான கஞ்சா, ஹன்ஸ் உள்ளிட்டவற்றுடன் வந்தனர். இந்த போதைப் பொருட்களின் பயன்பாடு குறித்து சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினை வருமாறு:-

அன்பழகன்: புதுவை அரசின் நடவடிக்கையினால் கடந்த சில மாதங்களாக சட்டம் ஒழுங்கு கட்டுப்பட்டிற்குள் உள்ளது. இருந்தபோதிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை அதிகமாக நடக்கிறது. இதன் மீது காவல்துறை நடவடிக்கை இல்லை. 15 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். பள்ளி, கல்லூரி அருகே இதன் விற்பனை அதிகமாக உள்ளது.

குற்ற செயல்களில் அதிகமாக ஈடுபடும் இளைஞர்கள் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களாக உள்ளனர். பஸ், ரெயில் நிலையங்களில் இவை தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த செயல் நடைபெறுகிறது.


முதல்-அமைச்சர் நாராயணசாமி: நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. முதலில் திருட்டுத்தனமாக லாட்டரி விற்கப்பட்டதை தடுத்தோம்.

கஞ்சா விற்பனை தொடர்பாக வந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். வில்லியனூரில் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலா 2 கிலோ வீதம் 2 முறை கஞ்சா பிடிபட்டுள்ளது. கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். காவல்துறை முனைப்போடு செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்