இரட்டை திருமாளிகை சீரமைப்பு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சேதம் அடைந்த இரட்டை திருமாளிகையை சீரமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-07-12 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில், பல்லவ மன்னன் கலைநுட்பத்துடன் இரட்டை திருமாளிகையை உருவாக்கினார். சேதம் அடைந்த இந்த திருமாளிகை சீரமைப்பு பணியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சீபுரம் ராயன்குட்டையை சேர்ந்த சிவபக்தர் டில்லிபாபு, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது சரியாக பதில் அளிக்காததால் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதனால் டில்லிபாபு, காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட் எண்-1 ல், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மீனாட்சி இது குறித்து விசாரணை நடத்தினார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, வேலூர் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், நந்தகுமார் ஸ்தபதி ஆகியோர் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, பெரிய காஞ்சீபுரம் போலீசுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து டில்லிபாபு கூறுகையில், இரட்டை திருமாளிகை திருப்பணி செய்ய, இந்து சமய அறநிலையத்துறை சுமார் ரூ.75 லட்சம் ஒதுக்கி உள்ளது. ஆனால், அந்த நிதியில் சரியாக பணிகள் நடைபெறவில்லை. இதனிடையே கோவிலில் உள்ள இணையதளத்தில், இரட்டை திருமாளிகை திருப்பணிக்கு நிதியுதவி கோவில் நிர்வாகம் கோரியது. எனவே இதில் முறைகேடு நடந்துள்ளது என்றார்.

இந்த கோவிலில் பஞ்சலோக சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக டில்லிபாபுவின் தந்தை அண்ணாமலை, காஞ்சீபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இது தொடர்பாக விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்