தமிழகம் முழுவதும் போலி வாக்காளர் அட்டை வினியோகமா? தீவிர விசாரணை

‘வாட்ஸ் அப்‘ குழு அமைத்து தமிழகம் முழுவதும் போலி வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக நாகர்கோவிலில் கைதான கோவை வாலிபர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். குழுவாக இணைந்து செயல்பட்டவர்கள் யார்-யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-07-12 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டாரில் ஒரு கம்ப்யூட்டர் மையம் செயல்பட்டு வந்தது. அங்கு போலியாக வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கொடுப்பதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார், அந்த கம்ப்யூட்டர் மையத்தில் சோதனை நடத்தியதில் போலியாக வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் செந்தில்குமார் மற்றும் பணியாளர் சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், வாட்ஸ்-அப்பில் வந்த தகவல் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக தயாரித்து வினியோகம் செய்ததாக கூறினார். இதைத் தெடர்ந்து போலீசார், செந்தில்குமாருடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு தகவல் பரிமாறியது யார்? என விசாரித்தனர்.

அப்போது, அந்த எண் கோவையை சேர்ந்த கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் சதீஷ்குமார் (வயது 29) என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து கோவைக்கு விரைந்த தனிப்படை போலீசார், சதீஷ்குமாரை குமரி மாவட்டம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இணையதளத்தில் இருந்து வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கான ரகசிய எண்ணை தனக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்தார். அதன்மூலம் தகவல்கள் இணையதளத்தில் பெறப்பட்டு, வாட்ஸ்-அப் மூலமாக மற்றவர்களுடன் பரிமாறப்பட்டதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து, சதீஷ்குமாரின் வாட்ஸ்-அப் தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கென தனி குழு ஆரம்பித்து செயல்பட்டதாக திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த குழுவில் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளவர்களும் இணைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து சதீஷ்குமாரை, கோட்டார் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சதீஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் போலி வாக்காளர் அட்டை வினியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், சதீஷ்குமாரின் வாட்ஸ்-அப் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் யார்? யார்?, அவர்களும் இதுபோன்று போலியாக வாக்காளர் அடையாள அட்டையை தயாரித்து வழங்கி வருகின்றனரா? இந்த மோசடியில் முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்