தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் கலெக்டர் தகவல்

தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

Update: 2018-07-12 22:15 GMT
ராமநாதபுரம்,

சென்னை மாகாணம் என்றிருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசு தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ் வளர்ச்சித்துறை, கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கலை பண்பாட்டு துறை சார்பில் ராமநாதபுரம் கவுரிவிலாஸ் அரண்மனையில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) மாவட்ட அளவில் நாட்டுப்புற நடனம், தமிழிசை வாய்ப்பாடு, பரதநாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) ஆகிய கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 15 வயது முதல் 30 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மாணவ- மாணவிகள் மற்றும் தொழில்முறை கலைஞர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் மூன்று பரிசுகள் பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் மாநில கலைப்போட்டிகளில் பங்கு பெறலாம். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2-ம் பரிசாக ரூ.25ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3-ம் பரிசு ரூ.10ஆயிரம்மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு நேரடியாக காலை 9 மணிக்கு வருகை தந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கலைப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விரங்களுக்கு 94449 49739, 90036 10073 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்