கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல்

கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல் வாங்க மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.

Update: 2018-07-12 22:45 GMT
குளச்சல்,

மீனவர் ஒருங்கிணைப்பு சங்க ஆலோசனை கூட்டம் செயற்குழு உறுப்பினர் ஜான்சன் தலைமையில் கொட்டில்பாட்டில் நடந்தது. தலைவர் வின்சென்ட், துணை தலைவர் தங்கராஜ், செயலாளர் ஆன்றோ லெனின், இணை செயலாளர் நசரேன் பெர்னாட், பொருளாளர் மெர்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற கப்பல் கட்டுமான தலைவர் மன்ஜீஸ், குளச்சல் மீன்வளத்துறை துணை இயக்குனர் அஜித் ஸ்டாலின், கட்டுமான குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், அந்தோணியடிமை, விஞ்ஞானி லாசரஸ், வானிலை தகவல் சேவையாளர் மைக்கேல் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: அவை வருமாறு:-

இயற்கை பேரிடர் காலங்களில் கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ரூ.15 கோடியில் மீட்பு கப்பல் வாங்குவது, இதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் அளித்து ஒரு அறிவிப்பை வெளியிட கேட்பது, தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் உயிர் பாதுகாப்பு கருதி மிதவை கூடாரம், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்கள் அரசு சார்பில் வழங்க கேட்பது, அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்திய பெருங்கடல் ஆகியவை சங்கமிக்கும் குமரி மாவட்டத்திற்கு வானிலை அறிக்கை தனியாக அறிவிக்க கேட்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்