பெரியாறு-வைகை அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

பெரியாறு, வைகை அணைகளில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வைகை பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-07-12 22:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதிமூலம், நிர்வாகிகள் கணநாதன், உலகநாதன், மலைச்சாமி, காசிராஜன், நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலெக்டர் லதாவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகர மக்களின் அன்றாட தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து குடிநீர் ஒதுக்கீடு பெறப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மணலூர் ஆகிய இடங்களில் வைகை ஆற்றில் இருந்தும் மதுரை மாநகருக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடிநீர், விவசாயத்திற்கு தேவையான அளவு நீரை பெரியாறு, வைகை அணைகளில் இருந்து பெறமுடியவில்லை. பெரும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் வைகை ஆறு ஆண்டு முழுவதும் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இந்த தருணத்தில் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாக உள்ளது. ஏற்கனவே மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கிவரும் திட்டங்களில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெரியாறு, வைகை அணைகளில் இருந்து பெறுவதற்கு தமிழக அரசால் எந்தவித உத்தரவாதமும் செய்யப்படவில்லை. மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வைகை நதி பழைய ஆயக்கட்டுதாரர்கள் பயன்பாட்டில் இருந்து வரும் குடிநீர் பாசன வசதிகளை, உரிமைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு அவ்வப்போது புதிய குடிநீர் பாசன திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே வைகை, பெரியாறு அணைகளில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பழைய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் வழங்க உத்தரவாதம் செய்யப்படாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடும், பாசன இழப்பும் ஏற்பட்டு விவசாய நிலங்கள் தரிசாகிவிட்டன. எனவே பழைய ஆயக்கட்டு பாசன உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றில் குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய குடிநீர் திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதன்படி மதுரை ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைகளுக்காக நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிடைக்கும் வெள்ள நீரை மதுரைக்கு திருப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்