மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர பகுதிகளில் மீன்பிடி தொழில் பாதிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கரையோர பகுதியில் மீன்பிடி தொழில் பாதித்துள்ளது. இதனால் அங்கு சுவை மிகுந்த மீன்களை சுவைக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2018-07-12 23:26 GMT
கொளத்தூர்,

மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியான பண்ணவாடி, கோட்டையூர், சேத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடிப்பதற்காக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி உரிமம் பெற்று உள்ளனர். மேட்டூர் அணையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்த மீனவர்கள் கடந்த 6 மாதங்களாக வறண்டுபோன மேட்டூர் அணையால் மீன்பிடி தொழில் இல்லாமல் மாற்று தொழிலை தேடி பல்வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு உயரலாம் என்ற எதிர்பார்ப்பில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள மீனவர்கள் காவிரி கரையோரங்களில் தற்காலிக முகாம்களை அமைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட தயாராய் இருந்தனர்.

இதற்கிடையில் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடி தொழிலை தற்போது தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். கர்நாடக அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அதிவேகமாக வந்து கொண்டிருப்பதால், இந்த தண்ணீரில் பரிசலை இயக்க முடியாது என்பதால் மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடி தொழிலில் ஈடுபடவில்லை என்றும், எனவே தங்கள் தொழில் பாதித்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனால் பண்ணவாடி நீர்தேக்கப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுவை மிகுந்த மீன்களை சுவைக்க பண்ணவாடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்