தொழில் உரிமம் பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம்

நெல்லிக்குப்பம் நகராட்சியில் தொழில் உரிமம் பெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2018-07-12 23:50 GMT
நெல்லிக்குப்பம்,


நெல்லிக்குப்பம் நகராட்சியில் தொழில் உரிமம் பெறுவது குறித்த வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆணையாளர் (பொறுப்பு) மகாராஜன் தலைமை தாங்கினார். நகர அமைப்பு ஆய்வாளர் செல்வம், இளநிலை உதவியாளர்கள் வெங்கடேசன், சுலைமான்சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள், ஓட்டல், திருமண மண்டபம், மருத்துவமனை, மருந்துக்கடை, நகைக்கடை, இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உள்பட வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆணையாளர் மகாராஜன் பேசுகையில், நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் 85 சதவீதம் பேர் தொழில் உரிமம் பெறாமல் கடைகள் நடத்துகிறார்கள். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே வணிகர்கள் அனைவரும் தொழில் உரிமம் கட்டாயம் பெற வேண்டும். தொழில் உரிமத்தை புதுப்பிக்காதவர்கள் உடனே உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தொழில்வரி, குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தவேண்டும் என்றார்.


இதற்கு பதிலளித்து வணிகர்கள் பேசுகையில், நகராட்சியில் தொழில் உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது 4 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கட்டணம் குறித்து எங்களிடம் கருத்து கேட்காமல் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் உரிமம் புதுப்பிப்பதற்கான கட்டணம் மற்றும் தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டவேண்டும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும் ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் புதுப்புது வரிகள் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதால், நாங்கள் தொழில் செய்வதை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். எனவே உயர்த்தப்பட்ட தொழில் உரிமம் கட்டணம் மற்றும் வரி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்