எஸ்டேட் மேலாளரை மிதித்து கொன்ற காட்டுயானை

சாந்தாம்பாறை அருகே எஸ்டேட் மேலாளரை, காட்டுயானை மிதித்து கொன்றது. மனைவியின் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-07-12 23:53 GMT
மூணாறு, 

தமிழ்நாடு தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 46). இவர் சாந்தாம்பாறையை அடுத்த ராஜாபாறை அருகே உள்ள எஸ்டேட்டில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி கவிதா. குமார் தனது குடும்பத்துடன் எஸ்டேட் குடியிருப்பில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று குமார் தனது மனைவியுடன் போடி மீனாட்சிபுரத்துக்கு சென்றார். பின்னர் நண்பர் சுருளி, மனைவி ஆகியோருடன் ஜீப்பில் ராஜாபாறைக்கு திரும்பி வந்தார். பின்னர் அங்கிருந்து எஸ்டேட் குடியிருப்பு நோக்கி அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, பாதையின் குறுக்கே காட்டுயானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானையை கண்டதும் அவர்கள் அருகேயுள்ள குடியிருப்பு பகுதி நோக்கி ஓடினர்.

எனினும் யானை அவர்களை நோக்கி ஓடி வந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரும் அங்கிருந்து ஓடினர். ஆனால் குமார் மட்டும் யானையிடம் சிக்கி கொண்டார். இதையடுத்து யானை குமாரை துதிக்கையால் அடித்தது. இதில் வலியால் அவர் அலறினார். பின்னர் அவரை மிதித் தது. தன் கணவரை யானை தாக்கியதை பார்த்த கவிதா கூக்குரலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். எனினும் யானை தாக்கியதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குமாரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இறந்த குமாருக்கு பிரியதர்ஷினி, ரஷ்மி என்ற 2 மகள்கள் உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மாதத்தில் மட்டும் காட்டுயானை தாக்கி 3 பேர் இறந்துள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்