தாயமங்கலம் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கண்டெடுப்பு

தாயமங்கலம் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2018-07-13 00:05 GMT
இளையான்குடி,

இளையான்குடி தாலுகா தாயமங்கலத்திற்கு அருகே உள்ளது எட்டிசேரி கிராமம். இங்கு நாட்டார் கால்வாய் மராமத்துப்பணி செய்தபோது பழங்காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகளும், கீறல் குறியீடுகளை கொண்ட பானை ஓடுகளும், நுண்கலை வேலைபாடு கொண்ட பானை ஓடுகளும் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் நடத்திய தொல்லியல் அகழாய்வுகளை முன்வைத்து, இவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தபோது கிடைக்கப்பெற்ற பொருட்கள் கி.மு.1000 முதல் கி.பி.100 வரையிலான காலத்தில் உள்ளவை என கணக்கிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு செய்த கோவை இந்துஸ்தான் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ராஜேந்திரன் கூறியதாவது:-

தமிழர் நாகரிகம் வாழ்ந்ததற்கான அடையாளமாக உள்ள கீழடியில் முதுமக்கள் தாழிகள், பளபளப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், கீறல் குறியீடு உள்ள ஓடுகள், எழுத்துவடிவம் கொண்ட பானை ஓடுகள், துளையுடைய பானை ஓடுகள், நுண்கலை வேலைப்பாடுடைய ஓடுகள், கீழடியில் கண்டெடுக்கப்பெற்றது. இதேபோன்று எட்டிசேரியில் பிரிமணை ஓடுகள், ஓட்டுச்சில்லுகள் போன்ற பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.


தமிழகத்தில் பழந்தமிழ் கீறல் குறியீடுகளும், எழுத்து பொறிகளும் கல்வெட்டுகள், மலை குகைகளில் மட்டுமின்றி கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகளிலும் கிடைக்கின்றன என்பதற்குக் கீழடி, கொடுமணல், கொற்கை, உறையூர், கரூர், வல்லம் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் சான்றாக அமைகின்றன. இதேபோன்று கீறல் குறியீடு, எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் எட்டிசேரி நாட்டார் கால்வாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுக்க பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற குறியீடுகள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர் வாழ்ந்துவந்தனர் என்பது தெளிவாகிறது. எனவே எட்டிசேரியில் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு செய்து தமிழின் பெருமையை உலகுக்கு பறைசாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்