விவசாயியை கொன்ற வழக்கில், தாய்-மகன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை

விவசாயியை கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய வழக்கில் தாய்-மகன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-07-13 23:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தென்குமரை கிராமம், மேற்கு கொட்டகையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி (54). இவரது மகன் செந்தில்குமார் (34), மகள் சத்யவாணி (30). இவர்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் சொட்டு நீர் பாசன குழாய் அமைப்பதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 29.10.2015 அன்று இரவு மல்லிகேஸ்வரி, செந்தில்குமார், சத்யவாணி, இவர்களது உறவினர்கள் யுவராஜ் (32), மாணிக்கம் (58), தங்கம் (54), கோமதி (28) ஆகிய 7 பேர் சேர்ந்து வெங்கடாசலம் நிலத்தில் பதிக்கப்பட்டு இருந்த சொட்டு நீர் பாசன குழாயை பிடுங்கி கொண்டு இருந்தனர். சத்தம் கேட்டு வயலுக்கு வந்த வெங்கடாசலம் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர்களிடம், ஏன் சொட்டு நீர் பாசன குழாயை பிடுங்கி சேதப்படுத்துகிறீர்கள்? என்று கேட்டார்.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 7 பேரும் சேர்ந்து மண்வெட்டி மற்றும் தடியால் வெங்கடாசலத்தை சரமாரியாக தாக்கினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள ஒரு கிணற்றில் போட்டு விட்டு அங்கிருந்து அனைவரும் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் மல்லிகேஸ்வரி, செந்தில்குமார் உள்பட 7 பேரும் வெங்கடாசலத்தை அடித்து கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு சேலம் 3-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையொட்டி நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தாய் மல்லிகேஸ்வரி, அவரது மகன் செந்தில்குமார், மகள் சத்யவாணி, யுவராஜ், மாணிக்கம், தங்கம், கோமதி ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 7 பேருக்கும் தலா ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 7 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தமிழரசன் வாதாடினார்.

விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, சேலம் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பு தலைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்