தமிழ்த்துறையை தேர்வு செய்து படித்தால் உயர் பதவிக்கு வரலாம், தேர்வு நெறியாளர் அறிவுரை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் நடந்த 2 நாள் தேசிய கருத்தரங்கு நிறைவு பெற்றது.

Update: 2018-07-13 23:15 GMT
திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பாரதிதாசன் உயராய்வு மையத்தில் சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் “இனிய தமிழும் இன்றைய நிலையும்- பெரியார், பாரதியார், பாரதிதாசன், சி.பா.ஆதித்தனார், அண்ணா“ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நேற்று முன்தினம் தொடங்கியது. கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்டு பேசிய தேர்வு நெறியாளர், தமிழ்த்துறையை தேர்வு செய்து படித்தால் உயர் பதவிக்கு வரலாம் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக கருத்தரங்கு நடந்தது. 3-வது அமர்வுக்கு பேராசிரியர் நாகூர் கனி தலைமை தாங்கினார். ‘பாரதியாரின் சமூக சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் ரமேஷ், ‘சி.பா.ஆதித்தனார் முன்வைக்கும் ஊடக அறம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனீஸ்மூர்த்தி உள்பட வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரையாளர்கள் பேசினர்.

கருத்தரங்கு நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துரையரசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒரு குடும்பம் போல செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தாலும் அதில் உயர்ந்த நிலைக்கு வர முடியும். தமிழ்த்துறையை படித்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? உயர் பதவிக்கு வரமுடியுமா? என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் உள்ளது. நான் (துரையரசன்) தமிழ்த்துறையை தேர்ந்தெடுத்து படித்தவன் தான். பின்பு இதே துறையில் பேராசிரியராக பணிக்கு சேர்ந்தேன். தற்போது தேர்வு நெறியாளராக இந்த பதவிக்கு வந்துள்ளேன். இதுபோல நீங்களும் (மாணவ-மாணவிகள்) உயர்ந்த பதவிக்கு வர முடியும்.

மாணவர்கள் படிக்கும் போது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொது அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும். உயர்ந்த நிலையையும் அடைய முடியும். சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளை உற்றுநோக்க வேண்டும்.

இந்த கருத்தரங்கின் தலைப்பு மிக சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘இனிய தமிழும் இன்றைய நிலையும்’என்பதில் புரட்சியாளர்களை பற்றி ஒப்பிடும் போது இந்த 2 நாள் மட்டுமல்ல தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கலாம். பத்திரிகை உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார், சமூகத்தில் புரட்சியை உண்டாக்கியவர் பெரியார், மேடை பேச்சில் புரட்சியாளர் அண்ணா இப்படி ஒவ்வொரு புரட்சியாளர்களின் கருத்துக்களை இதுபோன்ற கருத்தரங்கில் பெற்று மாணவ-மாணவிகள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம் வாழ்க்கையில் மேம்படவும், முன்னேறவும் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முருகேசன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாட்டின் சிறப்பை முதன் முதலில் அறிமுகம் தந்தவர் பாரதியார். தந்தி செய்திகளை முந்தி, வதந்தி இல்லாமல் பாமரனும் படிக்க வேண்டும், தமிழும் வளர வேண்டும் என்றும், முதன் முதலில் தமிழை பட்டி தொட்டி எங்கும் படிக்க வைத்த பெருமை சி.பா.ஆதித்தனாருக்கு உண்டு.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மாணவர்கள் தாயை வணங்குவீர்கள், தரணியில் உயருவீர்கள். தந்தை சொல்லை மனதில் ஏற்றி ஆசான் வழியில் நடக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வல்லுனர்களாக உருவாகுங்கள்” என்றார்.

கருத்தரங்கில் கட்டுரையாளர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழை தேர்வு நெறியாளர் துரையரசன் வழங்கினார். நிறைவு விழாவில் மாணவ-மாணவிகள், பேராசிரியர், பேராசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாரதிதாசன் உயராய்வு மையத்தின் உதவி பேராசிரியரும், இயக்குனர் பொறுப்புமான கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்