குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..

Update: 2018-07-13 22:30 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வாடியான்களம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் நீர்தேக்கத் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களாக போதிய அளவு குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வாடியான்களம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து குடிநீர் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை ஆணையர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்