திருட்டுகளை தடுக்க போலீஸ் ரோந்து அதிகரிக்கப்படும் நாராயணசாமி தகவல்

திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசாரின் ரோந்து அதிகரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-07-13 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-


சிவா: புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாக தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறியுள்ளன. குடும்பத்தோடு வெளியூர் சென்றவர்களின் வீடுகளை நோட்டமிட்டு குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது. புதுச்சேரியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடர்கள் கைவரிசையை காட்டினர்.

இதேநேரத்தில் கோவில் உண்டியல்களை ஒரு கும்பல் உடைத்து திருடியது. நகரப் பகுதியில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும் நடந்தன. இதுபோன்ற திருட்டுகள் தற்போதும் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்கவில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். கடந்த காலத்தைப்போல இரவு முழுவதும் நகரை சுற்றிவர காவல் ரோந்து வாகனம் மீண்டும் விட வேண்டும்.


முதல்-அமைச்சர் நாராயணசாமி: புதுவையில் திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் ரோந்துபணியை அதிகப்படுத்தினோம். வெளிமாநிலத்தில் இருந்து வந்து இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டனர். போலீசாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டதால் தற்போது திருட்டுகள் குறைந்துள்ளன. நான் எம்.பி.யாக இருந்தபோது 10 ரோந்து வாகனங்களை வழங்கினேன். இப்போது 10 ரோந்து வாகனங்களை வாங்கி கொடுத்து ரோந்து பணியை அதிகரிக்க உள்ளோம்.

ஜெயமூர்த்தி: கோவில் உண்டியல் உடைப்பு சம்பவங்களும் அதிகமாக உள்ளது.

வையாபுரி மணிகண்டன் (அ.தி.மு.க.): இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களை மடக்கி போலீசாரை சோதனை செய்ய சொல்லுங்கள். அப்படி செய்தாலே திருட்டுகள் குறைந்துவிடும். சோலை நகர் பகுதியில் 25 நாட்களுக்கு முன்பு 20 பவுன் நகை திருட்டு போனது. ஆனால் இதுவரை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்