போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கு: சந்துருஜியை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சந்துருஜியை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2018-07-13 23:15 GMT
புதுச்சேரி,


புதுச்சேரியில் சிலரின் வங்கி கணக்குகளில் பணம் மோசடி செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியதில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக பலரது வங்கி கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் புதுவை லாஸ்பேட்டை என்ஜினீயர் பாலாஜி, ஜெயச்சந்திரன் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா, மணிசந்தர் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போது சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, நீண்ட நாட்களாக போலீசில் சிக்காமல் இருந்தார். அவரை கடந்த 11-ந் தேதி சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


இந்த நிலையில் சந்துருஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.ஐ.டி. போலீசார் புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணசாமி நேற்று விசாரணை செய்தார். சந்துருஜியை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அவர் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து சி.ஐ.டி. போலீசார் சந்துருஜியை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், சந்துருஜியின் டைரியில் சிக்கிய தகவல்கள் அடிப்படையில் சர்வதேச கும்பலுடன் உள்ள தொடர்புகள் குறித்தும், அரசியல் பிரமுகர்களின் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்துருஜியிடம் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேரடியாக விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் அவர் தலைமறைவாக இருந்த காலங்களில் எங்கெல்லாம் தங்கி இருந்தார், அவருக்கு யார், யார் அடைக்கலம் கொடுத்தனர் போன்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்