உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களால் பரபரப்பு

குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-13 21:45 GMT
குளித்தலை,

மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் தென்கரை வாய்க்காலில் மரப்பாலம் அமைக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று குளித்தலையில் உள்ள ஆற்றுப்பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வகையில் தென்கரை வாய்க்காலில் மரப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு தேவைக்கு இப்பாலத்தை கடந்து தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றுவந்தோம். இங்கு பொதுக்கழிப்பிடம் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பினரும் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இப்பாலத்தை கடந்து ஆற்று பகுதிக்கு சென்றுவருகின்றோம். இப்பாலத்தின் அடிப்பகுதியில் கல் தூணில் உள்ள வாய்க்காலில் தண்ணீரில் வந்த குப்பைகள் தேங்கியதால் சில கல் தூண்கள் சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால் பாலம் பழுதடைந்திருந்தது. இந்த நிலையில் இப்பாலத்தை மராமத்து செய்ய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், மருதூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த வருடம் இப்பாலத்தை அகற்றிவிட்டனர்.

இதன்பிறகு பாலத்தை புதுப்பித்துதர தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இப்பாலம் இல்லாதகாரணத்தால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றி நடந்து செல்லவேண்டியுள்ளது. இதனால் எங்கள் பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே ஏற்கனவே இருந்த இடத்தில் பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட வந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து அவர்களிடம் பேசிய அலுவலர்கள் பாலம் கட்டுவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்ட பேரூராட்சிக்கு அனுமதி கடிதம் அளிக்கப்படும். அப்பகுதியில் விரைவில் பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையிட வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்