வாகனத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

சாந்தாம்பாறை அருகே நெடுஞ்சாலைத்துறை வாகனத்தில் பேட்டரி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தேனிக்கு கடத்த முயன்றபோது போலீசாரிடம் அவர்கள் சிக்கி கொண்டனர்.

Update: 2018-07-13 22:25 GMT
இடுக்கி,

இடுக்கி மாவட்டம் பூப்பாறை-போடிமெட்டு இடையே சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைக்கும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைப்பது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பூப்பாறை அருகே நிறுத்தப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை வாகனத்தில் பேட்டரி மற்றும் வாகன உதிரி பாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாந்தாம்பாறை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேட்டரி திருடிய நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ரூ.5 லட்சம் மதிப்பிலான பேட்டரிகள், வாகன உதிரி பாகங்களை ஒரு ஜீப்பில் பூப்பாறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி செல்வதாக சாந்தாம்பாறை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் ஜீப் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் ஜீப்பை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். பின்னர் போடிமெட்டு பகுதியில் அந்த ஜீப்பை மடக்கி பிடித்து, அதில் சோதனையிட்டனர்.

அப்போது ஜீப்பில் பேட்டரிகள், வாகன உதிரி பாகங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து ஜீப்பில் வந்த 2 பேரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 25), தேனியை சேர்ந்த குமார் (30) என்பதும், பூப்பாறை அருகே நிறுத்தியிருந்த நெடுஞ்சாலைத்துறை வாகனங்களின் பேட்டரிகளை திருடி தேனிக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நெடுங்கண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்