காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவர்களை மாலை, கிரீடம் அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Update: 2018-07-13 23:36 GMT
தாம்பரம்,

காமராஜர் பிறந்த நாள், பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவ-மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகர், வட்டார கல்வி அலுவலர்கள் ராபர்ட் வில்லியம், பாஸ்கரன், சேலையூரை அடுத்த திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை பனிமயம் பெர்னாண்டோ மற்றும் பள்ளி ஆசிரியைகள் சென்னையை அடுத்த சேலையூர் அருகே மப்பேடு கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றனர்.

அங்கு பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் என 15 பேரை மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி, அவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், சீருடைகள் ஆகியவைகளை சீராக வழங்கி, மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

ஊர்வலத்தில் அவர்களின் பெற்றோர் மற்றும் திருவஞ்சேரி பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர். ஊர்வலமாக அழைத்து வந்த குழந்தைகள், மாணவர்களை பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அப்போது அவர்களை பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் கைதட்டி வரவேற்றனர்.

தங்கள் குழந்தைகளை மாலை மரியாதையுடன் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்