விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்

கடலூரில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-13 23:48 GMT
கடலூர்,

கடலூரில் மாவட்ட குடும்ப நல செயலாக்கத்தின் சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாதவி, துணை இயக்குனர்(குடும்ப நலம்) டாக்டர் கலா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறுகுடும்பமே சிறப்பான ஓர் அர்த்தமுள்ள எதிர்கால ஆரம்பத்துக்கு உறுதுணை என்ற தலைப்பில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திட வேண்டும் என்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு இருந்து புறப்பட்ட இந்த பேரணி மஞ்சக்குப்பம் ரவுண்டானா, பாரதிசாலை, பீச்ரோடு சந்திப்பு வரை சென்று மீண்டும் அதே வழியாக அரசு தலைமை மருத்துவமனையை சென்றடைந்தது.

இதில் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஹபீசா, மருத்துவமனை திட்ட அலுவலர் டாக்டர் பரிமேல் அழகர், டாக்டர் அசோக்பாஸ்கர், தலைமை மருத்துவ அலுவலர்கள், குடும்பநல செயலக அலுவலர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், நாட்டுநலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. உறுதி மொழியை கலெக்டர் தண்டபாணி வாசிக்க, அங்கே நின்ற அதிகாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள் திருப்பி சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

மேலும் செய்திகள்