பாதாள சாக்கடை கழிவுநீரை ஆற்றில் கலக்க எதிர்ப்பு: சத்தியமங்கலத்தில் கடையடைப்பு- ஆர்ப்பாட்டம்

பாதாள சாக்கடை கழிவுநீரை ஆற்றில் கலக்க எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-13 23:15 GMT
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. இதற்காக சத்தியமங்கலத்தின் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி குழிகள் தோண்டப்பட்ட இடங்கள் சரிவர மூடப்படவில்லை.

இதன்காரணமாக சத்தியமங்கலத்தின் பல்வேறு வீதிகள் மற்றும் முக்கிய ரோடுகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் ரோடுகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி வாகன விபத்துகளும் எற்பட்டு வந்தன. எனவே பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடு மற்றும் வீதிகளை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க சத்தியமங்கலத்தை அடுத்த கோட்டுவீராம்பாளையம் மின் மயானம் அருகே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே சத்தியமங்கலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இங்கு நீரேற்றம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. அவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீரானது அங்குள்ள பவானி ஆற்றில் கலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சத்தியமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீரை ஆற்றில் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சியினர், சமூக அமைப்புகள், சேவை சங்கங்கள் ஆகியவற்றை கொண்ட ‘சத்தியமங்கலம் மக்கள் நல கூட்டமைப்பு’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.

பாதாள சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்க எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் 13-ந் தேதி சத்தியமங்கலத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி சத்தியமங்கலத்தில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது. இதையொட்டி சத்தியமங்கலத்தில் மளிகை, ஜவுளி, ஓட்டல், நகை கடைகள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் போன்றவை அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆட்டோ, வேன் எதுவும் ஓடவில்லை. ஆனால் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. அத்தியாவசிய பொருட்களான மருந்து மற்றும் பால் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கடையடைப்பு நடைபெற்றது.


இதையொட்டி சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம் தலைமை தாங்கினார். பவானி நதிநீர் பாதுகாப்பு குழு தலைவர் சத்தியசுந்தரி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ‘காப்போம் காப்போம் பவானி நதியை காப்போம். கலக்காதே, கலக்காதே பாதாள சாக்கடை கழிவுநீரை பவானி நதியில் கலக்காதே’ என கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து 15 பேர் அடங்கிய குழுவினர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நகராட்சி ஆணையாளர் சுதாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதை வரவேற்கிறோம். ஆனால் கழிவுநீரை பவானி ஆற்றில் கலப்பதை எதிர்க்கிறோம். எனவே மாற்று இடம் தேர்வு செய்து கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையொட்டி சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்