சேதமடைந்து பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடவேண்டும்

சீர்காழியில் சேதமடைந்து பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-14 22:30 GMT
சீர்காழி,

சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்த சுகாதார வளாகத்தை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

இதனால் கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகமே சுகாதார வளாகத்தை பராமரித்து வந்தது. இந்தநிலையில் தற்போது சுகாதார வளாக கட்டிடம் பல்வேறு இடங்களில் சேதமடைந்து ஆங்காங்கே தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. மேலும் கழிவுநீர் அகற்றப்படாமல் சுகாதார வளாகத்திற்குள் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் குடியிருந்து வரும் பொது மக்களும், வர்த்தகர்களும், சுகாதார வளாகத்தை சீர்செய்யக்கோரி சீர்காழி நகராட்சிக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், சுகாதார வளாகம் சீரமைக்காமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சுகாதார வளாகத்தை நகராட்சி நிர்வாகம் பூட்டிவிட்டது. இதனால் அந்த பகுதி பொது மக்களும், வர்த்தகர்களும் இயற்கை உபாதைகளை கழிக்க சுகாதார வளாகம் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை சீரமைத்து விரைவில் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று பொதுமக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்