தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 4,805 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 4,805 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2018-07-14 22:45 GMT
தஞ்சாவூர்,

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படியும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படியும் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இந்த முகாம் நடந்தது.

இதில் சிவில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் 5 அமர்வுகள் போடப்பட்டு விசாரணை நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி( பொறுப்பு) பூர்ணஜெயஆனந்த் தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பாஸ்கரன், முதன்மை சார்பு நீதிபதி மாலதி, கூடுதல் சார்பு நீதிபதி சுந்தர்ராஜன், சிறப்பு சார்பு நீதிபதி மலர்விழி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் விஜயஅழகிரி, நளினக்குமார், தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான பணிகளை தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாந்தி செய்திருந்தார்.

இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்த வழக்குகளில் 5,965 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 4,668 வழக்குகளில் ரூ.10 கோடியே 62 லட்சத்து 91 ஆயிரத்து 892-க்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் விபத்து இழப்பீடு வழக்குகள் 800 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 365 வழக்குகளில் ரூ.7 கோடியே 47 லட்சத்து 664 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

விபத்து இழப்பீடு வழக்கில் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்த மனுதாரருக்கு ரூ.17 லட்சமும், மூளை பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.12 லட்சமும் நஷ்ட ஈடு உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டது. விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த இரண்டு வழக்குகளில் கணவன் மனைவி இருவரையும் சமரசம் செய்து சேர்ந்து வாழ வழிவகை செய்யப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக்கடன் தொகைக்கான 4780 கணக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அதில் 136 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 கோடியே 86 லட்சத்து 59 ஆயிரத்து 665-க்கு தீர்வு காணப்பட்டது. இதே போல் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் ஆகிய ஊர்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தமாக 4,805 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.12 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரத்து 557-க்கு தீர்வு காணப்பட்டது. 

மேலும் செய்திகள்