ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2018-07-15 22:45 GMT
திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் சுஜய் (வயது 30), ஆரோக்கியராஜ் (32), பெனிட்டோ (40), சேவியர் (24), பெரியதாழையை சேர்ந்தவர்கள் அஜில்டன் (32), விக்டர் (36), பிரசாந்த் (25) ஆகிய 7 பேரையும், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்களத்தை சேர்ந்த இடைதரகர் ஒருவர் அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழில் செய்ய கடந்த 2017–ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு சென்ற அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. இடைதரகர் தங்களை ஏமாற்றிவிட்டார் என கூறி தாங்கள் பசியால் வாடுவதாகவும், ஊருக்கு திரும்ப போதிய பணம் இல்லை. தங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கூறி அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனாலும் இதுவரை அவர்கள் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மீனவர்களின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் சென்று விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இடைத்தரகரால் ஏமாற்றப்பட்டு ஈரானில் வேலையின்றி சிக்கி தவிக்கும் மீனவர்கள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கூறி உள்ளேன்.

ஓரிரு நாளில் கனிமொழி எம்.பி. டெல்லி சென்று மத்திய வெளியுறவு மந்திரியிடம் கூறி விரைவில் மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

மேலும் செய்திகள்