“சசிகலா குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் முதல்-அமைச்சராக முடியாது” அமைச்சர் தங்கமணி பேச்சு

ஜெயலலிதா ஆத்மா இருக்கும் வரை சசிகலா குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் முதல்-அமைச்சராக முடியாது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2018-07-15 23:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், மருதமுத்து, வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன் ஆகியோர் பேசினர். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் தங்கமணி, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக காவிரியிலிருந்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்தி வந்தார். ஆனால் அப்போது மத்தியிலே ஆண்ட காங்கிரசும், மாநிலத்தில் ஆட்சி நடத்திய தி.மு.க. வும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா போராடி பெற்ற தீர்ப்பிணை அரசிதழில் வெளியிட பல வகையில் போராடினார். ஆனால் அப்போது ஆட்சி நடத்தியவர்கள் அதனை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இன்றைக்கு காவிரி நீர் வருகிறது என்றால் அதற்கு ஜெயலலிதா தான் காரணமாவார்.

தற்பொழுது ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரை அப்பதவியிலிருந்து நீக்கி ஆட்சியை கலைப்பதற்கு பல்வேறு வகையில் தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் தொண்டர்களின் ஆதரவோடு இன்று வரை சிறப்பாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா இறந்தபிறகு கொறடா மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் உள்பட நாங்கள் அனைவரும் தினகரன் வீட்டிற்கு சென்று தினகரனிடம் நீங்கள் இந்த இயக்கத்திற்கு வந்தபிறகு பிரச்சினைகள் அதிகம் வந்துவிட்டது, ஆகையால் நீங்கள் இயக்கத்தை விட்டு ஒதுங்கி இருங்கள். ஓ.பி.எஸ். முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். அவரை வைத்து நாங்கள் இந்த இயக்கத்தை நடத்தி கொள்கிறோம் என்று சொன்னோம். அப்போது என்னையும், வேலுமணியையும் பார்த்து உங்கள் வீடுதேடி வந்து சட்டை காலரை தூக்கி உதைப்பேன் என்று சொன்னார்.

ஆனால் தினகரன் முதல்வராவதற்கு கனவு காணுகின்றார். ஜெயலலிதா ஆத்மா இருக்கும் வரை சசிகலா குடும்பத்தில் எவரும் முதல்வராக முடியாது என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இந்த கட்சியில் உரிமைக்கொண்டாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அம்மா ஒருமுறை சட்டமன்றத்தில் பேசியபோது, எனக்கென்று யாரும் கிடையாது, எனக்காக இருப்பவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களும், ஏழரை கோடி தமிழக மக்களும்தான் எனது குடும்பம் என பேசினார். ஆனாலும் எனக்குப்பின்னால் 100 ஆண்டுகாலம் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என கூறினார்.

ஒரு தொகுதியில் மக்கள் ஏமாந்துவிட்டார்கள் என்றால் ஆர்.கே.நகர் தொகுதியில் நுழையும்போதெல்லாம் ஏமாந்த மக்கள் ரூ.20 நோட்டை காண்பித்து ரூ.20 எங்கே, 10 ஆயிரம் எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை இருக்கின்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்குகூட செல்லமுடியாத சட்டமன்ற உறுப்பினர்தான் தினகரன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்றம் மகாபாரிவள்ளல், முன்னாள் மாவட்ட சேர்மன் தவசீலன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் அறிவு என்கிற சிவசுப்ரமணியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சாமிநாதன், நகர வீட்டுவசதி சங்க இயக்குனர் மோகன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுகூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. தலைமையில் செய்யப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்