துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்

பரங்கிப்பேட்டை அருகே துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 5-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-15 23:47 GMT
பரங்கிப்பேட்டை, 


பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் தனியார் அனல்மின் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி காரைக்காலில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு கொண்டு வரும் நிலக்கரியின் துகள்கள் அந்த பகுதியில் காற்றில் பறந்து, அருகில் உள்ள கிராமத்தில் உள்ள வீடுகள் மீது படிந்து வருகிறது. மேலும் குடிநீர் தொட்டி, கிணறுகள் ஆகியவற்றின் மீது துகள்கள் விழுவதால் குடிநீர் கலங்கலாக வருகிறது. இந்த நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கப்பல் மூலம் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கென அந்த பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கு, பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தனியார் அனல்மின்நிலையத்துக்கு கொண்டுவரப்படும் நிலக்கரியால் பாதிப்புக்கு உள்ளான கிராம மக்கள், துறைமுகம் அமைந்தால் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி, கிராமத்தில் மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லாமல் போய்விடும் என்கிற அச்சத்தில் அவர்கள் துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 11-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கென கிராமத்தில் சாமியானா பந்தல் அமைத்து, கிராம மக்கள் அதில் அமர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை அதிகாரிகள் கண்டும், காணாத வகையில் இருந்து வருகின்றனர். இருப்பினும் துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறி நேற்று 5-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் போராட்டம் பற்றி அறிந்த சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன் நேற்று புதுக்குப்பத்துக்கு சென்றார். தொடர்ந்து கிராம மக்களுடன் சாமியானா பந்தலுக்கு கீழே அமர்ந்து, அவர்களது கோரிக்கையை கேட்டறிந்த அவர், இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்