காஞ்சீபுரம் நகரில் ஒரு வழி பாதை போக்குவரத்தில் மாற்றம்

காஞ்சீபுரம் நகரில் ஒரு வழி பாதை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2018-07-16 00:01 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகரின் மையப்பகுதியான மூங்கில் மண்டபம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த சில மாதங்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அமலில் உள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அந்த சாலை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நகரின் முக்கிய சந்திப்பான காந்திரோடு தேரடியில் இருந்து மூங்கில் மண்டபத்துக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் வரமுடியாமல் மேட்டுத்தெரு வழியாக சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்பவர்களும் காந்திரோடு, ரங்கசாமி குளம் வழியாக சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் அவதிக்குஉள்ளானார்கள்.

எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் வசதிக்காக ஒரு வழி பாதை போக்குவரத்தில் மாற்றம் செய்யும்படி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம், போக்குவரத்து அதிகாரிகள் நடராஜன், சின்ன காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்து போலீசார் மூங்கில் மண்டபம் சந்திப்பு பகுதியில் நேரடியாக சென்று ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மூங்கில் மண்டபம் சந்திப்பு பகுதியில் ஒரு வழி பாதையில், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் இரு வழி பாதையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.


இதற்காக மூங்கில் மண்டம் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள், இரு வழி பாதையாக பயன்படுத்தி கொள்ள வசதியாக சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தினர். அதன்படி நேற்று காலை முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்தது.

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து மூங்கில் மண்டபம் வழியாக, கலெக்டர் அலுவலகம் செல்பவர்கள், பஸ் நிலையம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் இந்த சாலையை இரு வழி பாதையாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்