இலவச வீட்டுமனை-பட்டா கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த கிராம மக்கள்

இலவச வீட்டுமனை கோரி அடைக்கம்பட்டி கிராம மக்களும், குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கோரி எசனை காட்டு மாரியம்மன் கோவில் தெரு மக்களும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2018-07-16 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

குன்னம் தாலுகா தேனூரை சேர்ந்த மணிவேல் என்பவர் கொடுத்த மனுவில், தேனூர் பகுதியில் சிலர் மீண்டும் சாராயம் மற்றும் சட்ட விரோதமாக மது பானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

பெரம்பலூர் பெரியவெண்மணியை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுக்களில், கிராம சபை கூட்டம் நடத்தும் அதிகாரிகளுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், மற்றொரு மனுவில் குன்னம் தாலுகா கொத்தவாசல் கிராமத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையீட்டு குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

பெரம்பலூர் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் இளங்கோவன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் வந்து கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியில் பணி செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியகுழு தமிழ்நாட்டில் பரிந்துரை செய்த திருந்திய ஊதிய நிர்ணயத்திற்கான நிலுவை தொகையினை 1-10-2017 அன்று முதல் வழங்கிடவும் உத்தரவிட்டது.

ஆனால் பெரம்பலூர் ஒன்றியத்தில் மட்டும் தான் அந்த நிலுவை தொகை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களில் பணி செய்பவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நிலுவை தொகை வழங்கப்படாத ஒன்றியங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவை தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி ஊராட்சிக்கு உட்பட்ட எசனை காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 40 வருடங்களாக குடியிருக்கிறோம் என்றும், ஆனால் இது வரை எங்கள் வீட்டு மனைக்கு அரசு பட்டா வழங்கவில்லை. நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதே போல் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி வடக்கு தெருவில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். எங்களால் வாடகை பணம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பூலாம்பாடி மாதவி தெருவை சேர்ந்தவர் சுதந்திரகுமார் கொடுத்த மனுவில், மானியத்துடன் விவசாய டிராக்டர் வழங்குவதாக ஏஜென்சி கூறியதால் கடனாக தனியார் நிதி நிறுவனம் மூலம் டிராக்டரை பெற்று கொண்டேன். ஆனால் அந்த நிதி நிறுவனம் எனது வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து எனக்கு தெரியாமல் காசோலை மூலம் லட்சக்கணக்கில் பணம் எடுத்து மோசடி செய்தது. நானும் சரியாக தவணை தொகையினை செலுத்தினேன். மேலும் பொய்யான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தில் உத்தரவை பெற்று எனது விவசாய டிராக்டரை அந்த நிதி நிறுவனம் ஜப்தி செய்தது. விவசாய டிராக்டர் கடன் தவணை 4 ஆண்டுகள் இருக்கும்போதே டிராக்டரை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் சாதிய படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பொதுமக்களிடம் இருந்து மேற்கண்ட மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்