வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்தரியமாதா தேர் பவனி திரளானோர் பங்கேற்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்தரியமாதாவுக்கான திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-07-16 22:45 GMT
வேளாங்கண்ணி,

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயமும் ஒன்று. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று.

இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் மும்பையை சேர்ந்த மராட்டிய மீனவர்கள் சார்பில் உத்தரியமாதாவுக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உத்தரியமாதாவுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக பேராலயத்தில் அதிபர் பிரபாகர் தலைமையில் மராட்டிய மொழியில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தேர் புனிதம் செய்யப்பட்டு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உத்தரியமாதா பவனி நடைபெற்றது. பேராலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி கடைத்தெரு, கடற்கரை வழியாக சென்று மீண்டும் வேளாங்கண்ணி பேராலயத்தை வந்தடைந்தது. இதில் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். உத்தரியமாதா தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் நேற்று வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்