தொடர் மழையால் ஊட்டியில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தொடர் மழையால் ஊட்டியில் மரம் முறிந்து விழுந்து 3 வீடுகள் சேதமடைந்தன.

Update: 2018-07-17 23:00 GMT
ஊட்டி,

கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி படகு இல்ல சாலை உள்ளிட்ட சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மரங்கள், மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது விழுவதால் மின் ஒயர்கள் அறுந்து விழுந்து சில இடங்களில் மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் மின் இணைப்பு இல்லாமல் அவதி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி சி.எஸ்.ஐ. ஜெல்மெமோரியல் பள்ளி அருகே சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 3 வீடுகள் மீது முறிந்து விழுந்தது. அப்போது வீடுகளில் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. மரம் விழுந்ததால் வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும் வீட்டுக்குள் மரக்கிளைகள், மரத்துண்டுகள் விழுந்து கிடந்தன. இரவு நேரம் என்பதால் வீடுகளின் மீது விழுந்த மரத்தை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மின்வாள் கொண்டு மரத்தை துண்டு, துண்டாக வெட்டியும், கயிறு கட்டி இழுத்தும் அப்புறப்படுத்தினர். மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் மீது நின்று மரத்தை அகற்ற முடியாததால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் சுமார் 3 மணி நேரம் போராடி மரம் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஊட்டி-புதுமந்து சாலையில் டம்ளர் முடக்கு பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதமாக காணப்பட்ட ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் கூலித்தொழிலாளி பத்மா என்பவரது வீடு, இன்பசாகர் பகுதியில் செல்வம் என்பவரது வீடு, நஞ்சநாட்டில் மேல்கோழிக்கரை பகுதியில் ஒரு வீடு, சோலூரில் ஒரு வீடு ஆகிய 4 வீடுகளின் ஒரு பகுதி தொடர் மழையால் இடிந்து விழுந்து உள்ளது. இதில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

குன்னூர்-9, கூடலூர்-43, குந்தா-21, கேத்தி-9, கோத்தகிரி-8, நடுவட்டம்-34, ஊட்டி-23.2, கல்லட்டி-15, கிளன்மார்கன்-49, அப்பர்பவானி-165, எமரால்டு-54, அவலாஞ்சி-161, கெத்தை-10, கிண்ணக்கொரை-3, தேவாலா-59, பர்லியார்-15 என மொத்தம் 678.2 மழை பதிவாகி உள்ளது. இது சராசரியாக 39.89 ஆகும்.

மேலும் செய்திகள்