தெப்பக்காடு-மசினகுடி சாலையோரத்தில் 3 குட்டிகளுடன் உலா வந்த புலி

தெப்பக்காடு-மசினகுடி சாலையோரத்தில் 3 குட்டிகளுடன் புலி உலா வந்தது. இதனை வாகனத்தில் வந்தவர்கள் பார்த்து வியந்தனர்.

Update: 2018-07-17 22:45 GMT
மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமானது 690 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டு உள்ளது. புலிகள் வாழ்வதற்கான சாதகமான சூழ்நிலை இருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியாக விளங்கும் மசினகுடி, தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை வனப்பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.

நாளுக்கு நாள் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன் காரணமாக அரிதாக காண முடிந்த புலிகள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கண்களில் தென்பட்டு வருகின்றன. குறிப்பாக பகல் நேரங்களிலேயே புலிகள் சாலையை கடந்து செல்வதை காண முடிகிறது. மசினகுடி-தெப்பக்காடு சாலை மற்றும் கக்கனல்லா-தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் புலியை அதிகளவில் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து மசினகுடியை நோக்கி வாகனத்தில் வந்தவர்கள் தெப்பக்காடு-மசினகுடி சாலையில் பெண் புலி ஒன்று தனது 3 குட்டிகளுடன் நிற்பதை பார்த்து உள்ளனர். அதனை தொடர்ந்து வாகனத்தை அவர்கள் நிறுத்திய போது, பெண் புலி தனது குட்டிகளுடன் சாலையோரத்துக்கு சென்றது. பின்னர் தாய் புலி புதருக்குள் சென்று மறைந்தது. ஆனால், குட்டி புலிகள் தாயுடன் புதருக்குள் செல்லாமல் சாலையோரத்தில் உள்ள மரம் அருகே நின்று கொண்டு வாகனத்தில் இருந்தவர்களை பார்த்தவாறு சிறிது நேரம் அமர்ந்து இருந்தன.

அத்துடன் குட்டிகள் இடையே ஒன்றுக்கொன்று விளையாடி மகிழ்ந்தன. இதனை வாகனத்தில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பொதுவாக புலி, சிறுத்தைப்புலிகளை மனிதர்கள் எளிதில் காண முடியாது.

ஆனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் தாய் புலியும், அதன் மூன்று குட்டிகளையும் ஒரே நேரத்தில் பார்த்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்