தெப்பக்குளத்தை தூர்வாரும்போது கிடைத்த கோபுர கலசம் அதிகாரியிடம் ஒப்படைப்பு

அழகர்கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் போது கிடைத்த கோபுர கலசத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

Update: 2018-07-17 22:00 GMT
மதுரை, 


அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவையின் சார்பில் ஆயிரம் இளைஞர்கள் பங்கு பெறும் சைக்கிள் பேரணி பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 10 தொகுதிகளில் தொடர்ந்து 5 நாட்கள் சைக்கிள் பேரணி நடக்கிறது. நேற்று 2-வது நாளாக சைக்கிள் பேரணி அழகர்கோவிலில் தொடங்கியது. முன்னதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகரை சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் 18-ம் படி கருப்பணசாமி சன்னதி முன்புள்ள பவித்ர புஷ்கரணி தெப்பக்குளத்தை தூர்வாரும் பணியில் அமைச்சர் ஈடுபட்டார். அவருடன் சைக்கிள் பேரணியில் வந்த இளைஞர்கள், அ.தி.மு.க.வினரும் பங்கேற்றனர். அப்போது குளத்தில் இருந்த செடிகள், கொடிகள் முட்புதர்கள் அகற்றப்பட்டன. அப்போது குளத்தின் மேற்கு பகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஒரு குழுவினர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இருந்த பகுதியில் கோபுர கலசம் ஒன்று கிடைத்தது. அதை தொடர்ந்து குடங்கள், சிறிய அளவிலான சாமி சிலைகள் கிடைத்தன. உடனே அமைச்சர், கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அதிகாரிகளை அழைத்து அதனை ஒப்படைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் அந்த குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார். பின்னர் அழகர்கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதை தொடர்ந்து அமைச்சர் தலைமையிலான சைக்கிள் பேரணி தொப்புலாம்பட்டி, அலங்காநல்லூர் வழியாக திருப்பரங்குன்றம் பகுதிக்கு வந்தது. வழியில் அமைச்சர் வயல்காட்டில் வேலை செய்யும் விவசாயிகளை சந்தித்து அரசின் சாதனை குறித்து விளக்கி கூறினார்.

மேலும் தமிழத்தின் எங்கும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற சிந்தனையில் திட்டங்களை வகுத்து விவசாயிகளின் நண்பனாகவும், சகோதரனாகவும் முதல்-அமைச்சர் விளங்கி வருகிறார்.

ஆகவே உங்கள் நலன் காக்கும் இந்த அரசிற்கு ஆதரவை தருவது மட்டுமல்லாது வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், திருப்பரங்குன்றம் பகுதி துணைச்செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்